புதுடெல்லி: 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று திரும்பிய அனைத்து கட்சி எம்பிக்கள் குழு இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறது. அவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த ஆதரவு குறித்து பிரதமரிடம் விளக்குவார்கள். கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் மாபெரும் ராணுவ நடவடிக்கையை மே 7ம் தேதி மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்புகள் மீது குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்துவரும் நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கவும், தீவிரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதை சர்வதேச சமூகத்தின் முன் அம்பலப்படுத்தவும் காங்கிரஸ் எம்.பி.சசி தரூர், திமுக எம்பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே, ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்கள், முன்னாள் தூதர்கள் என 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய 7 குழுக்கள் 30க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன.
பல்வேறு உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலைப்பாட்டை வெற்றிகரமாக எடுத்துரைத்த இந்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினரை, பிரதமர் மோடி இன்றிரவு 7 மணிக்கு சந்திக்கிறார். டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பு குறித்த தகவலை, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் அலுவலகம், சர்வதேச குழு உறுப்பினர்களுக்குத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது பயணத்தின் போது கிடைத்த அனுபவங்கள், சர்வதேச தலைவர்களுடனான சந்திப்புகளின் முடிவுகள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த ஆதரவு ஆகியவை குறித்து இந்த குழுவினர் பிரதமரிடம் விரிவாக எடுத்துரைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானை நிதி நடவடிக்கைக்கான பணிக்குழுவின் ‘கிரே’ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கிடைத்த ஆதரவு குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.