உடுமலை: திருமூர்த்தி மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குறிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தளத்தில் மலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் ஆண்டுதோறும் நீர்வரத்து இருக்கும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீர் கனமழை பெய்ததால், பாலாறு, தோணி ஆறு உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களுக்கு அருவி நீர்வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை வானிலை சாதகமாக இருந்த நிலையில், நீர்வரத்தும் கட்டுக்குள் இருந்தது. இதனையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கினர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.