சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 என்பதை ரூ.2,000 ஆகவும், 6ம் முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3,000 என்பதை ரூ.6,000 ஆகவும், 9 முதல் 12ம் வகுப்பு வரை ரூ.4000 என்பதை ரூ.8000 ஆகவும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.6,000 என்பதை ரூ.12,000 ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7,000 என்பதை ரூ.14,000 ஆகவும் வழங்கப்படும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்ட பின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.