மதுரை: ஆவணி மாத பிரதோஷம், பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நாளை (ஆக.17) முதல் வரும் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசைக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுவதால், விருதுநகர் மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல், பிற மாவட்ட பக்தர்களும், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை விசேஷ காலங்களில் வந்து சாமி தரிசனம் செய்வர். ஆடி மற்றும் தை அமாவாசை திருவிழாக்களில் கூட்டம் களைகட்டும்.
இந்நிலையில், ஆவணி மாத பிரதோஷம், பவுணர்மியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ய நாளை (ஆக.17) முதல் ஆக.20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும். காலை 6 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே சனி பிரதோஷம் வருவதால் நாளை வரும் சனி பிரதோஷத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.