சென்னை: ரூ.1,535 கோடி நிதி ஒதுக்கீட்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2022-23ம் நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள 167 பேருந்துகள் நவ. 2024-க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், எஸ்.ஏ.டி.பி. திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இதேபோல் 2023-24ம் நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 888 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள 112 பேருந்துகள் நவம்பர் 2024 க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளன. மேலும் 2024-25ம் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 1535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 503 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி நிர்ணய ஆணை வழங்கப்பட்டு நவம்பர் 2024 க்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2,544 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
அதேபோல், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு மொத்தம் 2,166 பிஎஸ்- 6 டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 552 தாழ்தள பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு 59 தாழ்தள பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 493 பேருந்துகள் நவம்பர் 2024க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும், 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இதனிடையே 500 மின்சார பேருந்துகளுக்கு ஒப்பந்த புள்ளி தயார் செய்யப்பட்டு ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி ஒப்பந்த புள்ளி ஒப்புதலுக்கு பிறகு கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். உலக வங்கி உதவியுடன் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சென்னை மாநகராட்சி அடிப்படையிலான 500 மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு விலைப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளன. அதற்கான பணி ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 1064 பழைய பேருந்துகள் புதுப்பிப்பு
கடந்த 23ம் தேதி வரை 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, இதுவரை 1,796 புதிய பேருந்துகளும், 2022-23ம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 910 பேருந்துகளும் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதுதவிர, 2023-24 ஆம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.76.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 154 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 1,500 பேருந்துகளில் கடந்த 23ம் தேதி வரை அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.