சென்னை: யாருடன் கூட்டணி என்பது குறித்து 3 மாதங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், அமித்ஷாவை சந்தித்தது இல்லை, அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன் என்றும் கூறினார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதலை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றும், சென்னை அபிராமபுரத்தில் உள்ள மகள் கவிதா இல்லத்தில் தங்கியிருக்கும் ராமதாசை அவரது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் சந்தித்துப் பேசினார். அப்போது முகுந்தனின் தாயாரும் உடனிருந்தார். பாமகவின் இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த பிறகு தற்போது முகுந்தன், ராமதாஸை முதன்முறையாக சந்தித்துப் பேசினார். இந்நிலையில் சந்திப்புக்குப் பின் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில்தான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நிருபர்களை சந்திப்பது வழக்கம். இதுவரை 35 வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்துள்ளேன்.
இப்போது நீங்கள் எங்கே போனாலும் துரத்துவதால் உங்களை சந்திக்கிறேன். ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர். விரைவில் நல்ல செய்தி வரும். அது எங்கிருந்து வரும் என தெரியாது . கலைஞர், சக்கர நாற்காலியிலேயே முதலமைச்சராக இருந்தார். மலேசியாவில் மகாதீர் 92 வயதில் பிரதமரானார். ஆகையால் வயது என்பது ஒரு எண் அவ்வளவுதான். உங்களுக்கு நல்ல செய்தி விரைவில் வரும்..வரும். ஆனால் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வருமா என்பது தெரியாது. எங்கிருந்து வரும் என்பது தெரியாது. உங்களுக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது. நான் அனைத்து தலைவர்களையும் நேசிப்பவன்; பல பிரதமர்களுடன் தொடர்பில் இருந்தவன். தற்போது, பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர். அமித்ஷாவை சந்தித்தது இல்லை..அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதனால் அமித்ஷாவுக்கு நல் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். குருமூர்த்தி தைலாபுரம் வந்து என்னைச் சந்தித்தார். தற்போது நான் அவரை சென்னையில் சந்தித்தேன்.
விரைவில் நல்ல செய்தி வரும். கூட்டணி குறித்து எப்படியும் இன்னும் 2-3 மாதத்தில் தெரியவரும். அப்போது நீங்களும் எங்களுடன் இருப்பீர்கள். கட்சி யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். விஜய் தொடங்கி இருக்கிறார். அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களைச் சொல்கிறோம். அவர் எந்தக் கூட்டணிக்குப் போகிறார், எப்படிப் போகிறார் என்று எனக்கு ஜோசியம் தெரியாது. பாமகவினருக்கு ஒருபோதும் சோர்வு வராது. ஒரு காலத்தில் பாமக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது எனும் நிலை இருந்தது. அதனை மீண்டும் விரைவில் சரி செய்ய வேண்டும். கட்சி பலமாக வேண்டும் என்பதே கட்சித் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அதற்கான வேலையும் நடந்துக் கொண்டிருக்கிறது. அன்புமணியுடன் என்ன பேசினேன் என்பதெல்லாம் ரகசியம். சொல்லக் கூடாது. முகுந்தன் மீண்டும் கட்சிக்கு வருவாரா, பொறுப்பு கொடுக்கப்படுமா என்பதை எல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.