Wednesday, April 17, 2024
Home » கூட்டணி பேரத்தில் வெடித்தது அதிகார மோதல்: பாமக யார் கன்ட்ரோல்ல இருக்கு? அப்பா-மகன் குடுமிப்பிடி சண்டை; பாஜவுடன் சேர்ந்தால் ஓட்டு கேட்க முடியுமா? அன்புமணி ஆசைக்கும், பயத்துக்கும் நாம பலிகடாவா? கொதிக்கும் தொண்டர்கள்

கூட்டணி பேரத்தில் வெடித்தது அதிகார மோதல்: பாமக யார் கன்ட்ரோல்ல இருக்கு? அப்பா-மகன் குடுமிப்பிடி சண்டை; பாஜவுடன் சேர்ந்தால் ஓட்டு கேட்க முடியுமா? அன்புமணி ஆசைக்கும், பயத்துக்கும் நாம பலிகடாவா? கொதிக்கும் தொண்டர்கள்

by Karthik Yash

2024 மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது. ஆனால், மெகா கூட்டணி அமைப்போம் என்று பந்தா செய்த அதிமுகவும், பாஜவும் கூட்டணிக்காக தேமுதிக, பாமக மற்றும் லெட்டர் பேடு கட்சிகளை தேடி தேடி சென்று அசை காட்சி பேரம் பேசி கெஞ்சி கூத்தாடி வருகிறது. அதன்படி, அதிமுகவுடன் பாமக மற்றும் தேமுதிக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பாமகவுக்கு 7 மக்களவை சீட், ஒரு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முன் வந்தது.

இதற்கு ராமதாசும் ஓகே சொல்லிவிட்டார். இதேபோல், தேமுதிக 5 சீட் கேட்டது. இதற்கு அதிமுகவும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜ இப்படியே போனால் நாம டெபாசிட்டி கூட வாங்க மாட்டோம் என்று எண்ணி, பாமக மற்றும் தேமுதிகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், ராமதாஸ் அதிமுகவுடன் செல்ல உறுதியாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. உடனே, பாஜ தனது ஆசை, மிரட்டல் ஆயுதத்தை எடுத்தது. வடமாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் ஓட்டு வேண்டும் என்றால் பாமக தயவு பாஜவுக்கு தேவைப்பட்டது.

இதனால், அன்புமணியிடம் ரகசிய டீலிங் பேசியது பாஜ. அன்புமணி ஒன்றிய அமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதை சுட்டிகாட்டி ஒன்றிய அமைச்சர் பதவி, 10 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி மிரட்டியது. சமீபத்தில் தி.நகரில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் ஒன்றிய அமைச்சர்கள் சந்தித்து ரகசிய வார்த்தை நடத்தினர். இதற்கு அடிபணிந்து மயங்கிய அன்புமணி பாஜவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ராமதாஸை சமாதானம் செய்து உள்ளார். அப்பன், மகன் இடையே நடக்கும் குடும்ப அதிகார சண்டையால் பாமக உறுப்பினர்கள் புலம்பும் ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கட்சியின் சீனியர் உறுப்பினர் ஒருவர் ஜூனியர் உறுப்பினரை சங்க கூட்டத்தில் பங்கேற்க அழைக்கிறார். அதற்கு ஜூனியர் வர மறுத்தும், கட்சியில் நடப்பது எதுவும் சரியில்லை என்று புலம்பியும் தள்ளுகிறார்.

அந்த ஆடியோவில் பாமக உறுப்பினர்கள் பேசியதாவது: பாஜவுடன் கூட்டணி வைப்பதாக கூறிவருகின்றனர். பெரியய்யா (ராமதாஸ்), சின்னய்யா (அன்புமணி) அடித்துக்கொள்கின்றனர், இதற்கு நாம் பலிகடா ஆக வேண்டுமா. இது குடும்ப பிரச்னையா இருந்தால் அது அவர்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும், நம்மை தான் பாதிக்கிறது. ராமதாஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கினார், இப்போது கட்சியில் உண்மையாக உழைத்தவர்களை தூக்கி போட்டுவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூட ஜி.கே.மணி அண்ணனை அன்புமணி அசிங்கப்படுத்திவிட்டார். இதையெல்லாம் பார்க்கும்போது வருத்தமாக தான் இருக்கிறது, ஆனால் நமக்கு ஜாதி முக்கியமில்லையா, ஜாதியினருக்காக தான் யோசிக்க வேண்டியுள்ளது. நான்கு நாட்களுக்கு முன் அதிமுகவுடன் கூட்டணி என்று சொன்னார்கள், தற்போது பாஜகவுடன் கூட்டணி என்று கூறுகின்றனர்.

பாஜவினருடன் சேர்ந்து நாம் ஓட்டு கேட்க முடியுமா, அவர்கள் வந்து தெருவில் நின்றால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். அவர்களுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கிறார். முதலில் ஜி.கே.மணி திமுகவுடன் கூட்டணி வைக்க அறிவுறுத்தினார், ஆனால் விசிக முந்திக்கொண்டது. அவர்கள் இப்போ எங்கே இருக்கிறார்கள், நாம் எந்த நிலையில் இருக்கிறோம். இவர்கள் குடும்ப சண்டையில் தான் கவனம் செலுத்துகின்றனர். கட்சியினரை பற்றி யோசிக்காமல் உள்ளனர். யார் அதிகமாக காசு தருகிறார்களோ அவர்களுடன் தான் செல்கின்றனர், நமக்காக எதுவும் செய்வதாக இல்லை. யாருடன் கூட்டணி என்று சொல்லாமல் இருவர் சண்டை போட்டு கொண்டால் நாம் என்ன செய்வது.

இவர்களின் சண்டையால் நமக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது. விசிகவுக்கு திருச்சியில் கூட்டம் கூடியது போல நமக்கு இப்போது கூட்டம் கூடுமா, ஒரு காலத்தில் நமக்கும் கூட்டம் சேர்ந்தது. இப்போது நம்முடைய நிலைமை என்ன. சில ஆண்டுகளுக்கு முன் பாமகவை தேடி மற்ற கட்சியினர் வந்தனர், இப்போது நாம் எல்லோரிடம் கைகட்டி நிக்க வேண்டிய நிலை இருக்கிறது. காடுவெட்டி குரு இருந்த வரை கட்சி சிறப்பாக இருந்தது, ஆனால் கட்சிக்கு உயிரை கொடுத்த அவரையே உயிரெடுத்து விட்டனர். இவ்வாறு அவர்கள் பேசினர். தொடர்ந்து சீனியர் உறுப்பினர் கூட்டத்திற்கு வந்தால் பொறுப்புகள் கிடைக்கும் என்று கூறியும் ஜூனியர் உறுப்பினர் நீங்க வேண்டும் என்றால் போங்க நான் தடுக்கவில்லை, நான் கூட்டத்திற்கு வரவில்லை என கூறினார். இதே நிலைதான் பாமக தொண்டர்கள் மத்தியில் நிலவும் கருத்து. பதவி சுகத்துக்கு அன்புமணி வேண்டுமென்றால் போலாம்…நாம ஏன் போக வேண்டும் என்று கொந்தளிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

one + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi