மதுரை: கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 50 ஆண்டுக்கால காவிரி நீர் பிரச்சனைக்கு அதிமுக ஆட்சியில் தான் தீர்வு காணப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் முழுமையான தீர்ப்பை பெற்று மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவை பெற்றுத் தந்தது அதிமுக அரசு.
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அதிமுக முடக்கியது. காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தது அதிமுக. தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து போராடுவோம்; கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடந்தாலும் கோடநாடு சம்பவத்தை மட்டும் திட்டமிட்டு பேசுகின்றனர். கோடநாடு விவகாரத்தில் சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது பதிலளிக்காதது ஏன்? கோடநாடு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக ஆட்சியில்தான்.
கொரோனா காரணமாக நீதிமன்றம் செயல்படாத காரணத்தாலேயே வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். எங்களுக்கு எதிராக யார் எந்த பைல்ஸ்-ஐ வெளியிட்டாலும் கவலையில்லை; எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை எனவும் கூறினார்.