‘‘சின்ன மம்மியை தவிர மற்றவர்களுடன் இணைய தயாரானாலும் தன்னையே முன்னிலை படுத்தணும் என சேலம்காரர் கண்டிஷன் போட்டிருக்கிறாராமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி சேலம்காரர், தேனிக்காரர், குக்கர்காரர், சின்ன மம்மி என 4 துண்டாக சிதறி விட்ட நிலையில் அதிமுகவில் புதிதாக கிளம்பியுள்ள புயலை சமாளிக்க சேலம் தரப்பு படாத பாடுபடுகிறதாம்.. இதற்கெல்லாம் பின்னணி டெல்லி தான் என்பதை சேலம்காரர் புரிந்து கொண்டாராம்.. இதற்காக மாஜி ஒருவர் சேலம்காரரை சந்தித்து மத்தியஸ்தம் பேசினாராம்.. அப்போது மீண்டும் தேசிய கட்சியுடன் இணைய வேண்டியதை சேலம்காரருக்கு புரிய வைத்தாராம்.. பொதுச்செயலாளர் பதவி தன்னிடமிருந்து புயல் கிளப்புபவருக்கோ, கொங்கு மண்டல மணியானவருக்கோ மாறிவிடக் கூடாது என்பதால் அந்த மத்தியஸ்தத்திற்கு சேலம்காரர் செவி சாய்த்து விட்டாராம்.. கட்சியை மீண்டும் ஒன்று சேர்த்தால்தான் தேர்தல் நேரத்தில் ‘வேண்டியதை செய்வோம்’ என தேசிய கட்சி எச்சரிக்க, சின்ன மம்மியை தவிர மற்றவர்களுடன் இணைய சேலம்காரர் தயாராகி விட்டாராம்.. ஆனால் தேனிக்காரருக்கு வேறு பதவி கேட்கக் கூடாது என்றும், தலைமை பதவி தன்னிடம் தான் இருக்க வேண்டும், தேர்தலில் தன்னையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளாராம்.. இதுகுறித்து தேசிய கட்சியின் 2ம் கட்ட தலைவரின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.. அவர் கண்ணசைத்தால் இணைப்பு அரங்கேறும் என்று அல்வா மாவட்ட தேனிக்காரரின் ஆதரவாளர்கள் கூடிப் பேசி வர்றாங்களாம்.. இதனால் அவர்கள் முகத்தில் இப்போதே ஆயிரம் வாட்ஸ் பல்புகள் வெளிச்சம் தெரிகிறதாம்.. இதனை அறிந்து கொண்டுள்ள இலை தரப்பினர் இத்தனை நாள் பழித்து விட்டு இப்போது இணைந்தால் எப்படி பேச முடியும் என கையை பிசைந்து வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘திருட்டு மணல் கும்பலை பிடிக்க வேளாண் மக்கள் ரவுண்டு கட்டப்போறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சமீபத்தில் புயலில் சிக்கிய கடல் ஊர் பெயர் கொண்ட மாவட்டத்தில் மன்னார் கோவில் என்ற பகுதி உள்ளதாம்.. இங்கு விவசாய சாகுபடி குறையும் விளை நிலங்களுக்கு வண்டல் மண் பயன்படுத்தப்படுகிறதாம்.. இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் பெருமக்கள் அங்குள்ள வருவாய் அதிகாரியிடம் அனுமதி பெற்று ஏரிகளில் இருந்து மண்ணை எடுத்து பயன்படுத்தி வருகிறார்களாம்.. ஆனால் சமீபகாலமாக மணல் கடத்தலில் சமூக விரோத கும்பல் ஈடுபடுகிறதாம்.. இதற்காக போலி ஆவணங்களை அந்த கும்பல் சம்பந்தப்பட்ட துறை வட்டாரத்தில் சமர்ப்பித்து இருக்கிறதாம்.. இதற்காக வெள்ளை ஓடை வாய்க்கால் ஓரத்தில் சமீபத்தில் இரவு பகலாக திருட்டுத் தனமாக வண்டல் மண் விற்பனையும் நடக்கிறதாம்.. ஆனால் சம்பந்தப்பட்ட துறை வட்டாரமோ, விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்கிறதாம்.. இதனால் குழப்பத்தில் இருக்கும் உள்ளூர் வேளாண் பெருமக்கள் கையும் களவுமாக மணல் திருட்டு கும்பலை பிடிக்க திட்டமிட்டு வட்டமிட போறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தனது அரசியல் வாரிசை முன்னிறுத்த மாஜி உளறல்காரர் காய் நகர்த்தி வருகிறாராமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இரு மாஜிக்களும் மாவட்ட ெபாறுப்பில் இருக்காங்க.. மேற்கு மாவட்டத்திற்கு உளறல்காரர் பொறுப்பில் இருக்கிறார். இவரது மகனான மைக் நடிகரின் பெயரைக் கொண்டவர் மாநகராட்சியில் கவுன்சிலராக உள்ளார். மற்றொரு மகன் தலைநகரில் கல்லூரி நடத்தி வருகிறார். ஒரு மகன் ஏற்கனவே அரசியலில் உள்ளதால், கல்லூரி நடத்தும் மகனையும் எப்படியாவது மக்கள் பிரதிநிதியாக்கி விட வேண்டும் என்பதுதான் உளறல்காரரின் நிறைவேறாத ஆசையாக உள்ளதாம்.. இதற்காக சமீபகாலமாக நடக்கும் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளுக்கும் கல்லூரி நடத்தும் மகனை அழைத்துச் சென்று நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்து வைக்கிறாராம்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் மகனுக்கு எப்படியாவது மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியில் சீட் வாங்கிவிட வேண்டுமென்ற அவரது முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து எனக்கு அரசியல் வாரிசு கல்லூரி நடத்தும் எனது மகன்தான் என்பதை கட்சியினரிடம் முன்னிறுத்தவும், சீட்பெறும் முயற்சியில் கட்சி தலைமையிடம் வெற்றி பெறவும் தற்போது இருந்தே தனது மகனுக்காக காய்களை நகர்த்தி வருகிறாராம் உளறல் மாஜிஅமைச்சர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எம்பி சீட்டு விவகாரத்தில் சேலத்துக்காரர் தூக்கிப் போட்ட பெரும் குண்டால் முரசு கட்சியும் கூட்டணியை விட்டு கழன்று போகும் நிலை வந்துட்டாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெகா கூட்டணி ஒன்றை அமைப்பேன், யாரும் கவலைப்படவேண்டாம் என இலைக்கட்சி தலைவர் தொடர்ந்து தொண்டர்களை உசுப்பேற்றிக்கிட்டே இருக்காராம்.. ஆனால் அவருடன் கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லையாம்.. எல்லோரும் கைநழுவிப்போன நிலையில் கூட முரசு கைகொடுத்து நின்றதாம்.. ஆனால் அவர்களுக்கு எம்.பி. சீட் வழங்கப்படும் என உறுதி கொடுத்ததை இலைக்கட்சி தலைவர் மறுத்துட்டாராம்.. அதுபோன்ற உத்தரவாதத்தை யாரும் கொடுக்கலையேன்னு பெரும் குண்டை தூக்கி போட்டுட்டாராம்.. இதனால கூட்டணியில இருந்த கட்சியும் கழண்டுபோகும் நிலை ஏற்பட்டிருக்காம்.. என்றாலும் சமீபத்தில் அங்கீகாரம் பெற்று நடிகை விவகாரத்தில் சிக்கியிருப்பவரை தனது வலைக்குள் கொண்டு வர திட்டம் போட்டிருந்தாராம்.. பெண்களே முகம் சுழிக்கும் வகையில் பேசுவது குறித்த கேள்விக்கு, அவரை அசிங்கப்படுத்தாதீர்கள் என இலைக்கட்சி தலைவர் கூட்டணி நூல் ஒன்றை விட்டாராம்.. ஆனால் இறுதி மூச்சு உள்ளவரை தனித்தே நிற்பேன்னு அங்கிருந்து பதில் வந்து விட்டதாம்.. இப்போ இலைக்கட்சி தலைவரின் நிலைமை ஊருக்கு இழைத்தவன் கதையாகி போச்சாம்..
மூச்சுக்கு முன்னூரு தடவை மலராத கட்சியுடன் கூட்டணியே கிடையாதுன்னு சொன்னாராம்.. ஆனால் தற்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி சேர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்காராம்.. தங்கள் கட்சியுடன் கூட்டணி சேர இலைக்கட்சி தவம் கிடப்பதாக மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் இழக்காரமா சொல்றாராம்.. கூட்டணியில் சேர சில கண்டிசனும் போட்டிருக்காராம் இலைக்கட்சி தலைவர். இதை டெல்லி மேலிடமும் ஏற்றுக் கொண்டதாம்.. அதோடு மலராத கட்சியுடன் கூட்டணி சேரும் நேரத்தில் மாஜி போலீஸ்காரரின் தலைவர் பதவியும் காலியாகப்போவது தெரியாமல் மாஜி போலீஸ்காரர் உதார் உட்டுக்கிட்டு இருப்பதாக அக்கட்சியினர் சிரிச்சிக்கிட்டே சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
கூட்டணியைக் கைகழுவும் முடிவில் இருக்கும் முரசு கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0