Sunday, April 14, 2024
Home » பாஜவுடன் கூட்டணி சீட்டே வேண்டாம் என பதுங்கும் பாமக நிர்வாகிகள்: மாஜி எம்எல்ஏ திடீர் ‘அட்மிட்’; வேட்பாளர்கள் கிடைக்காமல் அல்லல்

பாஜவுடன் கூட்டணி சீட்டே வேண்டாம் என பதுங்கும் பாமக நிர்வாகிகள்: மாஜி எம்எல்ஏ திடீர் ‘அட்மிட்’; வேட்பாளர்கள் கிடைக்காமல் அல்லல்

by Karthik Yash

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் சேர்ந்து போட்டியிடுகிறது. அதிமுகவுடன் கூட்டணி சேரும் என்று கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பாஜ மேலிடம், அன்புமணி மீதான சிபிஐ வழக்கை வைத்து மிரட்டி, உருட்டி பாமகவை பணியவைத்தது. இதனால் பாமக மற்றும் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிமுகவுடன் கூட்டணியில் சேரும் பட்சத்தில் போட்டியிட திட்டமிட்டிருந்த பாமக நிர்வாகிகள் தற்போது பின்வாங்கத் தொடங்கி விட்டனர். அதிமுகவுடனான கூட்டணியில் சேலம் தொகுதியை பாமகவுக்கு பெற்றுவிட வேண்டும் என ராமதாசும், அன்புமணியும் தீவிரம் காட்டிவந்தனர்.

அந்த சீட்டை பெற்று முன்னாள் எம்எல்ஏ கார்த்திக்கு கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருந்தது. இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் ஏற்கனவே வேட்பாளரை தேர்வு செய்து வைத்துவிட்டதாகவும், கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில் எனது தொகுதியை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் உறுதியாக கூறிவிட்டார். ஆனால் பாமக, பாஜவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, சேலம் தொகுதியை விட்டுத்தர சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பாமக, பாஜவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டது.

இதனால் பாமகவில் சீட் கேட்டிருந்த நிர்வாகிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். அன்புமணி விரும்பிய முன்னாள் எம்எல்ஏ கார்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்காக அவர் கரன்சிகளை தயாராக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை விட்டால் பாமக தரப்பில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. பாஜவை நம்பி போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கமுடியாது என்று அனைவரும் கருதுகின்றனர். இந்நிலையில் வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து அனுப்புமாறு மேலிடம் கேட்டுக்கொண்டதையடுத்து, பாமக மாநகர தலைவர் அருள் எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், யாரும் ஆர்வம் காட்ட முன்வராத நிலையில் 4 பேரின் பெயரை தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அருள் எம்எல்ஏவின் தம்பி டாக்டர் சரவணன், மாநகர தலைவர் கதிர்.ராஜரத்தினம், பசுமை தாயகம் சத்ரியசேகர், ஓமலூரைச்சேர்ந்த டாக்டர் மாணிக்கம் ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில், 17 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக இருந்த கதிர்.ராஜரத்தினத்திற்கு சீட் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் கூறி வருகின்றனர். இதே நிலைதான் தர்மபுரி தொகுதிக்கும் ஏற்பட்டுள்ளது. அங்கு டாக்டர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யபட்ட நிலையில் கூட்டணி சரியில்லாத நிலையில் அவரும் போட்டியிடவிரும்பவில்லை என கூறிவிட்டாராம். இந்த நிலைதான் அனைத்து தொகுதிகளிலும் பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eleven + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi