சென்னை: தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இரண்டு தேர்தல்களிலும் இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக மற்றும் அக்கட்சியின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பாஜ கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக வெளியேறுவதாக அறிவித்தார். இனி அதிமுக – பாஜ கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி திட்டவட்டமாக நேற்று முன்தினம் அறிவித்து விட்டார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் பாஜ தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்தவாரம் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தபோது, டெல்லி பாஜ தலைவர்கள் தன்னிடம் கடந்த ஒரு மாதமாக தொடர்பில் உள்ளனர். தேர்தல் கூட்டணி குறித்து, பாஜ ஒரு முடிவு எடுத்து அறிவித்த பிறகு தனது முடிவை அறிவிப்பதாக கூறினார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி விவாதிக்க வருகிற 11ம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஓட்டலில் வருகிற 11ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தற்போது பாஜ கூட்டணியில் இருந்து எடப்பாடி அணியினர் வெளியேறி உள்ளனர். தமிழகத்தில் பாஜ தலைமையில் தனி அணி அமைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதனால், பாஜ கூட்டணியில் இணைந்து நாம் தேர்தலை சந்திக்கலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? என்பது குறித்து அலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜ தலைமையில் தனி அணி அமைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.