கெங்கவல்லி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் ஒருக்காலும் பாஜ காலூன்ற முடியாது என, அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா பேசியுள்ளதை பார்க்கும்போது, அதிமுக தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. அதிமுக-பாஜ பொருந்தாத கூட்டணி. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி ஆட்சி என்று கூறுகிறார்.
அதுகுறித்து இதுவரை அதிமுக பொதுச்செயலாளரிடமிருந்து உறுதியான பதில் இல்லை. பாஜ, தேஜ கூட்டணி என கூறுகின்றனர். அப்படி என்றால் இது அதிமுக கூட்டணியா அல்லது பாஜ கூட்டணியா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய விளக்கத்தை கொடுப்பார் என தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். தவெக தலைவர் விஜய் வருகையால், திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திரைப்பட வெற்றி என்பது வேறு. தேர்தல் அரசியல் என்பது வேறு. திரைப்படங்களில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம், தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.