Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எல்லா நாடுகளில் இருந்தும் வரும் அகதிகளை ஏற்க இந்தியா தர்ம சத்திரம் கிடையாது: குடியேற அனுமதி கேட்டு இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: அனைத்து இடங்களிலும் குடியேற இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது என்று இலங்கை தமிழர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கடந்த 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த இலங்கை தமிழரின் சிறை தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்தது. மேலும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். அதுவரையில் முகாமில் வேண்டுமானால் தங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ இவர் ஒரு இலங்கை தமிழர். அகதி விசாவில் வந்தவர் ஆவார். அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் குடியேறி விட்டனர். எனவே இவரையும் இந்தியாவிலேயே குடியேற அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘எல்லா இடங்களில் இருந்தும் வரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா என்பது ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது. அவ்வாறு கண்டிப்பாக செய்யவும் முடியாது. எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19ன் படி இந்திய குடிமக்களுக்குதான் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கு கிடையாது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இலங்கை தமிழரின் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.