காஞ்சிபுரம்: திருக்காலிமேடு பகுதியில் பராமரிப்பு இல்லாததால் முட்புதர்கள் சூழ்ந்து கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவரும் அல்லாபாத் ஏரியை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் ஏரிகளின் மாவட்டம் என ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு மாவட்டம் முழுவதும் ஏரிகள் அதிகளவில் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் இருந்து சின்ன காஞ்சிபுரம் செட்டி தெருவிற்கு செல்லும் வழியில், அல்லாபாத் ஏரி உள்ளது. சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி பல ஆண்டுகளுக்கு முன் திருக்காலிமேடு, திருவீதிபள்ளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
மேலும், இந்த ஏரி சுற்றுவட்டார பகுதிகளான திருக்காலிமேடு, நேதாஜி நகர், திருவள்ளுவர் தெரு, கேஎம்வி நகர், திருவீதிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கியது. இந்நிலையில், நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் தூர்ந்து போனதால் ஏரிக்கரையை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. மேலும், நகர விரிவாக்கத்தால் அல்லாபாத் ஏரியின் பாசன விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறியது. இந்த குடியிருப்பு கழிவுகள் அனைத்தும் இந்த ஏரியிலேயே வந்து சேர்ந்தது. இதனால், அல்லாபாத் ஏரி அப்பகுதி மக்களின் கழிவுகளை கொட்டும் இடமாக மாறியது.
மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி மாயமாகி உள்ளது. இதனால், தற்போது ஏரிக்கு நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் ஏரி முழுவதும் காடுபோல் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. முறையான பராமரிப்பு இல்லாதது மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மிகப்பெரிய நீராதாரமான அல்லாபாத் ஏரி வறண்டு கிடக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த பெருமழையில் வடிகால் கால்வாய்கள் இல்லாததால் இப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘அல்லாபாத் ஏரியால் தற்போது விவசாயம் எதுவும் நடைபெறவில்லை. அதனால், ஏரி சீரமைப்பதற்கு யாருக்கும் ஆர்வம் இல்லை. ஆனாலும் பெரு மழைக்காலங்களில் பழைய வரத்துக் கால்வாய் மற்றும் வெளியேறும் கால்வாய் இருந்த நீர்வழித்தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடியிருப்புகள் பாதிக்கப்படும். எனவே, இந்த ஏரியை சீரமைப்பு செய்வதுடன், நீர்வழித்தடங்களையும் சீரமைக்க வேண்டும்’ என்றனர். எனவே, புதர் மண்டிக் கிடக்கும் அல்லாபாத் ஏரியை தூர்வாரி, சீரமைத்து சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.