பிரயாக்ராஜ் மக்களவை தேர்தலில் நிதி உத்தரவாதம் அளித்தது தொடர்பாக 99 காங்கிரஸ் எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்ய கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி தேவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘மக்களவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி நிதி உத்தரவாத திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்திய தேர்தல் சட்டப்படி லஞ்சம் கொடுப்பது குற்றம் ஆகும்.
அப்படியானால் காங்கிரஸ் கட்சி அறிவித்த இந்த நிதி உத்தரவாத திட்டம் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். மே 2ம் தேதி இது தொடர்பான தேர்தல் விதிமுறை அறிவிப்பை ஆணையம் வெளியிட்டு அரசியல் கட்சிகளை எச்சரித்த போதும், காங்கிரஸ் கட்சி இதை கண்டு கொள்ளாமல் பிரசாரத்தில் நிதி உத்தரவாத திட்டம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த வாக்குறுதியானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 123(1)(ஏ)கீழ் லஞ்சம் வாங்குவது தொடர்பாகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 171பி மற்றும் 171ஈ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம். எனவே மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 99 காங்கிரஸ் எம்.பி.க்களும் தற்போதுள்ள சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும். தேர்தல் நேர்மையை நிலைநாட்ட அவசர நீதித்துறை தலையீடு தேவை’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.