சென்னை சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42ம் ஆண்டு இசை விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது: இயல் செல்வம் விருது பெற்றிருக்கக்கூடிய எஸ்.ராஜா பற்றி சொல்லத் தேவையில்லை. இதுதான் முதல் முதலில் நான் பெறும் விருது என்று அவரே சொன்னார்.
முதன் முதலாக அதுவும் என் கையால் விருது பெறுகிறார். இசைச் செல்வம் விருது பெற்றுள்ள மகதி, இசையுலகில் இளம் புயலாக வலம் வரக் கூடியவர். இரண்டு வயதிலேயே ராகங்களை சரியாகச் சொல்லும் ஆற்றலைப் பெற்று, மூன்று வயதிலேயே மேடையேறிப் பாடியவர். திருவாவடுதுறை ராஜரத்தினம் பெயரிலான ராஜரத்தினா விருதை இஞ்சிக்குடி கணேசன் பெற்றிருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே இவரது இசை ஒலித்துள்ளது. இஞ்சிக்குடி சகோதரர்கள் என்று பெயர் பெற்றவர் அவர். இந்த ஆண்டுக்கான நாட்டிய செல்வம் விருது வழுவூர் பழனியப்பனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டிய உலகில் வழுவூரார் பாணிக்கு தனிச்சிறப்பு உண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அத்தகைய வழுவூர் பாணி என்ற நாட்டிய பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர். தன்னைப் போலவே பல மாணவர்களை உருவாக்கி வரும் புகழ்பெற்ற நடன குருவாகவும் அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். வீணைச் செல்வம் விருது பெற்ற ராஜேஸ் வைத்யா. இசையுலகில் மட்டுமல்ல, திரையுலகிலும் அவர் தனது வெற்றிக் கொடியை நாட்டி இருக்கிறார். இந்த ஆண்டுக்கான தவில் செல்வம் விருது பெற்ற இடும்பாவனம் கண்ணன் 44 ஆண்டுகளாக தவில் வாசித்து வருகிறார். இந்த முத்தமிழ்ப் பேரவையின் வயது, இவரது கலைத்துறை அனுபவத்திற்கு ஒப்பாக இருக்கிறது. இத்தகைய ஆற்றல் மிக்கவர்களை, அனுபவம் மிக்கவர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கி, அவர்களின் கலை ஆளுமையை அங்கீகரித்திருக்கக்கூடிய முத்தமிழ்ப் பேரவையை உள்ளபடியே மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
கலைஞரை முன்வைத்து மக்கள் சேவையை, கலைத் தொண்டை ஆற்றி வரும் அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது என்பது தமிழை காப்பாற்றுவது. தமிழினத்தை காப்பாற்றுவது; ஆனால் இன்று சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்பு கணக்கு தான். அதை புரிய வைக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் தக்க பாடத்தை புகட்டுவார்கள். இது போல ஏராளமான இசை விழாக்கள், இலக்கிய விழாக்கள் நடக்கவேண்டும். புதிய புதிய நாடகங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
‘கலைஞர் பெயரால் முத்தமிழ் பேரவை விருதை வழங்க வேண்டும்’
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு இது என்பதால் இந்த ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் ஒரு விருதை முத்தமிழ்ப் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். முத்தமிழுக்குச் சிறப்புற தொண்டாற்றுபவர்க்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான விருதும் தனியாக வழங்க வேண்டும். பொதுவாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முத்தமிழ்ப் பேரவைச் செயலாளர் இயக்குநர் அமிர்தம் மீதான உரிமையின் காரணமாக கோரிக்கை வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.