பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. இந்த பருவமழை சுமார் இரண்டு மாதமாக தொடர்ந்து பெய்துள்ளது. பல நாட்களில் பகல், இரவு என தொடர்ந்து கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிஏபி திட்ட அணைகளான சோலையார், ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளுக்கு நீர் வரத்து அதிகமானதுடன், அடுத்தடுத்து அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டியது. இம்மாத துவக்கத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை நீடித்தது. அதிலும் கடந்த இரு வாரத்துக்கு மேலாக மழை மிகவும் குறைவானது. சிலநாட்களில் வெயிலின் தாக்கமே அதிகமானது.
மழை குறைவால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து சென்றனர். இதற்கpடையே, நேற்று முன்தினம் மாலையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தின் ஒரு பகுதியான ஆழியார் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் மழை பெய்ய துவங்கியது. இந்த மழை நேரம் செல்ல செல்ல கன மழையாக வலுத்தது. இரவு முழுவதும் இடைவிடாமல் மழை பெய்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் திடீரென ஆழியார் சுற்றுவட்டார பகுதியில் திடீர் என சூறாவளிக் காற்று வீசியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பலத்த காற்றுடன் பெய்த மழையால், ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் சாலையோரம் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்களின் கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்துள்ளது.
இதில், ஆழியார் அணை பூங்கா அருகே ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மரம் விழுந்ததால், அந்த காரின் ஒரு பகுதி பலத்த சேதமானது. இதையறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆழியார் ரோட்டோரம் ஆங்காங்கே முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆழியார் பகுதியில் மீண்டும் கன மழை பெய்ததுடன், இடை விடாமல் பலத்த காற்று வீசியதால், அப்பகுதியினர் பீதியடைந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான சர்க்கார்பதி, சேத்துமடை, தூணக்கடவு, அப்பர் ஆழியார் உள்ளிட்ட பகுதிகளை காட்டிலும் ஆழியார் பகுதியில் அதிக பட்சமாக 60 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.