பொள்ளாச்சி : ஆழியார் அணையில் படகு சவாரி தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் வரை மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் 120 அடி கொண்ட ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்த அளவிலே இருந்தது. மே மாதத்தில் ஓரளவு கோடை மழை பெய்திருந்தாலும் அந்நேரத்தில் அணையின் நீர்மட்டம் 63 அடி மட்டுமே இருந்தது. இருப்பினும் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கோடை மழைக்கு பிறகு, கடந்த ஜூன் மற்றும் ஜூலை என 2 மாதத்திற்கு மேலாக அடிக்கடி பெய்த தென்மேற்கு பருவ மழையால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானது. பல நாட்களில் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த கனமழையால் கடந்த மாதம் இறுதியில் நீர்மட்டம் முழு அடியையும் எட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அணையில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
இந்த மாதத்தில் மழை குறைந்ததால், ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. மேலும் விடுமுறை நாட்களில் ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமானது. ஆனால், ஆழியார் அணையில் தொடர்ந்து படகு சவாரி ரத்தால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். படகு சவாரி செய்யும் பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. படகு சவாரி குறித்து, கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் முடிவு தெரிவிப்பார்கள் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.