புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் இயங்கிவரும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 150 ஆண்டுகளுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் சிறுபான்மையினருக்கான அந்தஸ்துடன் செயல்படுவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது. நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகின்றதா என்பது தான் முக்கியம். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமா என்பது இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த வழக்கின் இதர அம்சங்கள் குறித்து வழக்கமான அமர்வு முடிவு செய்யும் என்று 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மற்ற 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புக்களை அளித்துள்ளனர்.