Sunday, September 15, 2024
Home » அன்னிய மரங்களை அகற்றும் விவகாரம் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தாதது ஏன்?..ஒன்றிய அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் 4 வாரம் அவகாசம்

அன்னிய மரங்களை அகற்றும் விவகாரம் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தாதது ஏன்?..ஒன்றிய அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் 4 வாரம் அவகாசம்

by Ranjith

சென்னை: வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்ற தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தாதது குறித்து விளக்க மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வனப்பகுதியில் பரவியுள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்த தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசின் சார்பு செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் ஆஜராகியிருந்தனர். ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ள 266 பணிகளில் மரங்களை அகற்றும் பணி சேர்க்கப் படவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பார்லிமெண்ட் நடந்து வருவதால் செயலாளர் ஆஜராக இயலவில்லை, இது சம்பந்தமாக விரிவான மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டச் சட்டத்தில் வன வளர்ப்பு பணிகளுக்கு இந்த நிதியை ஒதுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னிய மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை நட வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல் விளக்கம் தரலாமா எனவும், வனங்களை பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறை இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.பின்னர், ஒன்றிய அரசு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விளக்க மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், அதிகாரிகள் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi