சென்னை: சென்னை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்சன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
தேங்கி நிற்கும் நீரின் மூலமே கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் காய்ச்சல் வந்த பிறகு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதேபோல நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.