தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் மது போதை தகராறில், ரவுடி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 4 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். தண்டையார்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள், புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர், வரதராஜ பெருமாள் தெருவை சேர்ந்த லோகேஷ் (32) என்பதும், இவர் மீது திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, புது வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. இவர், தனது நண்பர் கானங்கத்த ராஜ் என்பவருடன் இந்த பகுதியில் மது அருந்தியுள்ளார்.
அப்போது, புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த சொட்டை பிரகாஷ் (38) அங்கு வந்து, கானங்கத்த ராஜிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தனது நண்பருக்கு ஆதரவாக சொட்டை பிரகாஷை லோகேஷ் தாக்கியுள்ளார். இதன் காரணமாக கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சொட்டை பிரகாஷ், அண்ணா நகரை சேர்ந்த தண்டபாணி (26), சுரேஷ் (31), மதன் (30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.