உடுமலை: உடுமலை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முகம்மது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்த பின் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்ற நிலையில், முகம்மது குலாம் தஸ்தகீர் மட்டும் ஒர்க் ஷாப்பில் விடப்பட்டிருந்த தனது டூவீலர் வருகைக்காக காத்திருந்தார்.
அப்போது பள்ளி வளாகத்துக்கு அருகிலேயே 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை கண்ட ஆசிரியர் முகம்மது குலாம் தஸ்தகீர், அவர்களிடம் பள்ளி வளாகத்தில் மது அருந்தக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்ற 4 பேரும் சிறிது நேரத்தில் மீண்டும் கையில் பெட்ரோல் கேனுடன் பைக்கில் வந்தனர். பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்திருந்த முகம்மது குலாம் தஸ்தகீரை கை, கால்களை பிடித்துக் கொண்டு மேலே பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றனர்.
பயத்தில் அவர் சத்தமிடவே, 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைகாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.