அல்பட்ரோஸ் (Albatross), அண்ட்டார்டிக் பெருங்கடலிலும், வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற்பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கைகளும் கொண்டவை. சதை இணைப்புள்ள கால் அடிப்பகுதி கொண்டவை. இப்பறவையினம் உலகில் இன்று உயிர்வாழும் மிகப் பெரிய பறவையினங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன. இவற்றின் பாதங்கள் வாத்தின் பாதங்கள் போல் தோற்றமளித்தாலும் அவை வலிமையானவை.
இவற்றின் சிறகுகள் ஒல்லியாகவும், நீளமாகவும் இருக்கும். இவை நீரில் வாழும் கணவாய் (squid), மீன், கடலில் வாழும் சிறிய உயிரினங்களையும், ஹட்டில் மீன் போன்ற மீன்களையும், கப்பல்களிலிருந்து கொட்டப்படும் உணவுப் பொருட்களையும் உண்ணும். இவை மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. அல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன.