ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் பழவந்தாங்கல் நேரு காலணியில் உள்ள சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆலந்தூர் மண்டல உதவி ஆணையரும், வாக்காளர் பதிவு அலுவலருமான முருகதாஸ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பரிமளா கந்தன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் வாக்காளர் அலுவலர் முருகதாஸ் பேசும்போது, அனைத்து வாக்காளர்களையும் வாக்குச் சாவடிக்கு கொண்டு வந்து 100 சதவீத வாக்குப்பதிவை நடத்துவதே நம் நோக்கமாகும்.
இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எளிதில் அணுகி அவர்களுக்குரிய முன்னுரிமையை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் இல்லாத சமயத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி வாரியான மாற்றுத்திறனாளி வாக்காளர் பட்டியலை அவர்களின் குறைப்பாட்டு வகையினை தயார் செய்து அப்பட்டியலை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பதியப்படாத மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 18வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மூத்த வாக்காளர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கி பேசினார்.