கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாஷா, திடீர் நெஞ்சு வலி காரணமாக கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் பாஷா (74). இவர், அல்உம்மா இயக்க தலைவராக உள்ளார். கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த ெதாடர் குண்டுவெடிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். கோவை தனி நீதிமன்றத்தில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கோவை கே.ஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கூறுகையில், ‘‘பாஷாவுக்கு, இருதய கோளாறு மற்றும் நுரையீரல் கோளாறு ஏற்பட்டுள்ளது. மூளையில் சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் அந்தந்த உறுப்புகள் சீராக இயங்க சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்’’ என்றார்.