கடலூர்: கடலூர் மாவட்டம் கட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அக்கி என்ற நோயால் முகம் சேதமடைந்த 3 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவர்களின் சீரிய முயற்சியால் முகம் சீரமைக்கப்பட்டது. கட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகத்தில் காயங்களுடன் 3 வயது சிறுவனை அவரது பெற்றோர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாக அக்கம் பக்கத்தினர் பேச்சை கேட்டு மண் உள்ளிட்டவற்றை குழப்பி முகத்தில் எழுதுகிறேன் என்ற பெயரில் கிராம வைத்தியர் சிகிச்சை அளித்துள்ளார். இதனால் நோயின் வீரியம் அதிகரித்துள்ளது. உடனடியாக அந்த சிறுவனுக்கு குழந்தைகள் நல மற்றும் தோல் கண் நோய் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை செலுத்தி சிறுவனை மருத்துவர்கள் குணப்படுத்தினர்.
முன்பு போலவே தற்போது சிறுவனின் முகம் சீரடைந்து இருப்பதால் அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். அக்கி தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமே தவிர சொந்தமாக வைத்தியம் பார்க்க கூடாது என அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அக்கி நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை பத்திரமாக குணப்படுத்தி அனுப்பிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்துவருகிறது.