மும்பை: மகாராஷ்டிரா துணை முதல் அமைச்சர் அஜித் பவாரும் அவருடைய அணியை சேர்ந்த அமைச்சர்களும் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினர். தெற்கு மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது. கடந்த 2ம் தேதி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார், 8 எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் சேர்ந்து அமைச்சர்களாகினர். அஜித்பவார் துணை முதல்வரானார். இந்த நிலையில் அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து பேசினார். தெற்கு மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
அஜித் பவாருடன் அமைச்சர்கள் ஹசன் முஷ்ரிப், சகன் புஜ்பால், அதிதி தட்கரே, திலீப் வல்சே பாட்டீல் மற்றும் எம்பி பிரபுல் பட்டேல் ஆகியோரும் சரத்பவாரை சந்தித்துப் பேசினர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரபுல் பட்டேல் கூறுகையில். ‘‘கட்சியின் ஒற்றுமையை காக்குமாறும், எங்களை ஆசீர்வதிக்குமாறும் சரத்பவாரிடம் கோரினோம். எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சரத்பவார் பதில் எதுவும் கூறவில்லை. சரத்பவார் எங்களுக்கு கடவுள் போன்றவர். அவரிடம் ஆசி வாங்கவே வந்தோம். இது முன்பேஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு அல்ல. சரத் பவார் ஒய்.பி.சவான் மண்டபத்தில் இருப்பதாக கேள்விப்பட்டோம். உடனே மண்டபத்துக்கு வந்து அவரை சந்தித்தோம்’’ என்றார்.