சென்னை: ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரின் கார் திடீரென்று விபத்தில் சிக்கியது. 3 முறை பல்டியத்த காரில் இருந்த அஜித் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் திரைக்கு வரும் இப்படத்தில், தன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்த அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று வருகிறார். துபாயில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றபோது, அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், பிறகு போர்ச்சுகல் நாட்டில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், நேற்றிரவு ஸ்பெயின் நாட்டில் வாலென்சியா நகரில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது அவரது காரை முந்திச்செல்ல முயன்ற இன்னொரு கார் பலமாக மோதியது. இதில் அஜித் குமாரின் கார் 3 முறை பல்டியடித்தது. இதில் சிக்கிய அஜித் குமார், அதிர்ஷ்டவசமாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். பல்டியடித்த காரில் இருந்து இறங்கிய அஜித் குமார், தனது கைவிரலை உயர்த்தி, ‘ஐ ஆம் ஓகே’ என்று சொன்னார். உடனே சென்னையில் இருந்த தனது உதவியாளர்களிடம் செல்போனில் பேசிய அவர், ‘நான் நலமாக இருக்கிறேன். எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. யாரும் எனக்காக கவலைப்பட வேண்டாம்’ என்று சொன்னார். அடுத்து அவர் வரும் மார்ச் 1ம் தேதி பார்சிலோனாவில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்.
பந்தய கார் எவ்வளவு பெரிய விபத்தில் சிக்கினாலும், பெரும் சேதம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கார் ஓட்டும் அஜித் குமார் அணிந்துள்ள ஆடையின் வடிவமைப்பு எந்த விபத்திலும் தீப்பிடிக்காத வகையிலும், உடல்ரீதியாக எந்த காயமும் ஏற்படாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 2வது முறையாக அஜித் குமார் கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்திருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவர் கார் பல்டியடிக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.