மும்பை: மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் தற்போதைய துணை முதலமைச்சர் அஜித் பவாரின் பெயர் விடுவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கிக்கு 2007ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய கூட்டுறவு வங்கி இயக்குனர் பிரிவில் இருந்த அஜித் பவார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் அந்த வழக்கில் தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. மாறாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான ஜெயந்த் பாட்டீல் உள்பட 14 பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல 1999 முதல் 2014ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநில நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்த போது அஜித் பவார் 70,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2014ம் ஆண்டு தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஆனால் தங்களால் ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட அஜித் பவாராயே உடன் சேர்த்துக் கொண்டு ஆட்சியமைத்துள்ள பாஜக அதற்கு பிரதிபலனாக அவர் மீதான நீர் பாசன ஊழல் தொடர்புடைய 9 வழக்குகளை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு மிகப்பெரிய ஊழல் வழக்கான கூட்டுறவு வங்கி மோசடி புகாரில் இருந்தும் அஜித் பவார் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே அஜித் பவார் பாஜகவோடு கைகோர்த்ததாக எதிர்க்கட்சிகள் விமர்த்து வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து ஊழல் வழக்குகளில் இருந்து அஜித் பவார் விடுவிக்கப்பட்டு வருகிறார்.