*போலீஸ் வருவதை அறிந்ததும் ஓட்டம்
குமாரபுரம் : அழகியமண்டபம் சந்திப்பு பகுதியில் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ரகளை செய்த போதை ஆசாமி போலீசார் வருவதை அறிந்ததும் நைசாக அங்கிருந்து தப்பி சென்றார்.அழகியமண்டபம் சந்திப்பு பகுதியில் நாகர்கோவில் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் உள்ள சாலையில் சென்டர் மீடியன் உள்ளதால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகவே செல்ல முடியும். முந்தி செல்லமுடியாது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணியளவில் கார் ஒன்று இந்த பகுதிக்கு வந்தது.
அந்த காருக்குள் டிரைவர் உள்பட 4 பேர் இருந்தனர். காரை ஓட்டி வந்த வாலிபர் திடீரென பஸ் நிறுத்தம் அருகே நடுரோட்டில் காரை நிறுத்தினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் முந்தி செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதைக்கண்ட பொதுமக்கள் காரை ஓட்டிய வாலிபரிடம் பேசினர். அப்போதுதான் அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. காரை எடுத்து செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியதால் டென்ஷன் ஆன போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டார்.
அந்த காரின் பின்னால் டாரஸ் லாரிகள் உள்பட பிற வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் பலமுறை பேசியபிறகும் அந்த போதை ஆசாமி காரை எடுத்து செல்லாமல் அடம்பிடித்தார். காருக்குள் இருந்த மற்ற 3 பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பொதுமக்கள் தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீசார் எப்படியும் வந்துவிடுவார்கள் என்பதை அறிந்துகொண்ட போதை ஆசாமி சட்டென்று காரை எடுத்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
அதன்பிறகுதான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். சுமார் அரைமணிநேரம் போதை ஆசாமி செய்த ரகளையால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அழகியமண்டபம் சந்திப்பு பகுதியில் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.