நன்றி குங்குமம் ஆன்மிகம்
அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தானங் களில், போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே, மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக் கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி பௌர்ணமியில் அபிஷேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.
வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்துவிடப்படுகிறது. ஆவுடைப் பகுதியில் இருக்கும் அன்னமானது, தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது. அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் பல மடங்கு கிட்டும்.
தாராள உணவு கிடைக்கும். பசிப்பிணி வராது, என்று கருதப்படுகிறது.அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும், உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட, உணவு தானியங்கள் பெருகி, பசிப்பிணி ஏற்படாது.
துலா ஸ்நானம்
ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால், காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலாஸ்நானம் என்றழைக்கப்படுகிறது. துலாஸ்நானம் நிகழ்வு, ரங்கத்திலும் மயிலாடுதுறையிலும் சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது. காவிரியில் துலா ஸ்நானம் செய்வதால், நம்முடைய மற்றும் நம்முடைய முன்னோர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப்பேறு ஆகியவற்றை, துலா ஸ்நானம் தருவதாகக் கருதப்படுகிறது. ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையில் காவிரி நீராடலை, `கடைமுழுக்கு’ என்றழைக்கப்படுகிறது.
தனத்திரயோதசி
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்க நகைகளையும் வாங்கி, தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால், வீட்டில் செல்வம் பெருகும்.
யம தீபம் – துவிதியை ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால், வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர். ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது.
யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே, அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப் பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன், சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப்பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
கோவர்த்தனதினம்
ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார். கோவர்த்தன கிருஷ்ணரை வழிபட நம்முடைய கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும்.
கோவத்ச துவாதசி
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை துவாதசி `கோவத்ச துவாதசி’ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
முருகன் சுக்ரவார விரதம்
முருகப் பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப் பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது. நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும். முருகன், சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப் பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
பாபாங்குசா ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி `பாபாங்குசா ஏகாதசி’ என்றழைக்கப்படுகிறது. இது பாவங்களைப் போக்கும் கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும்.
இந்திரா ஏகாதசி
ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்று அழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக்கூடாது.
தொகுப்பு: அனுஷா