சென்னை: ஒன்றிய ரயில்வே துறை இணை அமைச்சர் சோம ண்ணா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையை ஆய்வு செய்த அவர், நேற்று காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்து இறங்கினார். அவருக்கு பாஜ சார்பில் மாவட்ட தலைவர் ஜெகதீசன், நிர்வாகிகள் செந்தில்குமார், ஓம்சக்தி பெருமாள், ராஜேஷ், கூரம் விசுவநாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலைய பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ரயில்வே கட்டணம் மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரயில் நிலையம் அமைக்க ஆலோசனை பரிசீலனை உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாலாஜாபாத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.