புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 3 மெட்ரோ மற்றும் 2 ஏர்போர்ட் பணிகள் ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பில் பணிகள் நடை பெற உள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் பாதை 3க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வழித்தடங்கள் அடங்கும். பாதை 1 ஜே.பி.நகர் 4-வது கட்டத்திலிருந்து 32.15 கி.மீ தூரம் வரை கெம்பாபுரா அவுட்டர் ரிங் ரோடு மேற்கு வரை பணிகள் நடைபெறும். மொத்தம் 21 ஸ்டேஷன்கள் இடம் பெறும்.
பாதை 2ல் 9 ஸ்டேஷன்களுடன் மகடி சாலையில் ஹோசஹள்ளி முதல் கடபகெரே வரை 12.50 கி.மீ பணிகள் நடக்கும். இதற்கு ரூ.15,611 கோடி நிதி திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் ரூ.12,200 கோடி மதிப்பில் தானே ஒருங்கிணைந்த ரிங் மெட்ரோ ரயில் திட்டமும், ரூ.2954 கோடி மதிப்பில் புனே மெட்ரோ திட்டத்திற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் 2029ம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும். அதே போல் ரூ .1,549 கோடி மதிப்பீட்டில் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமான நிலையத்தில் புதிய பணிகள். ரூ. 1,413 கோடி மதிப்பீட்டில் பீகார் மாநிலம் பிஹ்தா ஏர்போர்ட் பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.