சென்னை: சென்னை விமான நிலையத்தில் இணையதள இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சர்வர்கள் சரிவர இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில், புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள், அந்தந்த விமான நிறுவன கவுன்ட்டர்களில், கணினிகள் மூலமாக வழங்குவார்கள். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை இணையதளம் முடங்கியது.
இதனால், பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் விமான நிறுவன கவுன்டர்களில் கையால் எழுதி தரப்பட்டது. இதையடுத்து பயணிகள் அவர்களுக்கான விமானங்களில் ஏறுவதும் தாமதம் ஆகியது. இதனால், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 விமானங்களும், உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூரு உள்ளிட்ட 12 விமானங்கள் என மொத்தம் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அனைவரும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, இணையதள இணைப்பில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சர்வர்கள் சரிவர இயங்கவில்லை. எனவே, ஒவ்வொரு கவுன்ட்டர்களிலும், கூடுதலாக ஊழியர்களை நியமித்து, போர்டிங் பாஸ்களை மேன்வல் மூலம் கைகளால் எழுதி கொடுக்க செய்தோம். இதனால் பயணிகள் விமானங்களில் ஏறுவது தாமதம் ஆகியது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும் சிறிது தாமதம் ஏற்பட்டது. மேலும் காலை 6 மணிக்கு மேல், இணையதள இணைப்பு சீராகிவிட்டது. எனவே விமான சேவைகளும் தற்போது வழக்கம் போல் நடக்கின்றன. என கூறினர்.