காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு நில எடுப்பு பணிகளில் பாதிக்கப்படும் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யவுள்ள கிராமங்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 19 கிராமங்களில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு நில எடுப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேற்படி கிராமங்களில், பரந்தூர், தண்டலம், நெல்வாய், ஏகனாபுரம் மற்றும் மகாதேவிமங்கலம் ஆகிய 5 கிராமங்களில் நில எடுப்பில் பாதிக்கப்படும் 1060 குடும்பங்களுக்கு, நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டத்தின் கீழ் மறுகுடியமர்வு செய்வதற்காக சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம் மற்றும் மகாதேவிமங்கலம் ஆகிய கிராமங்களில் சுமார் 238.78 ஏக்கர் பரப்பு நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, பாதிக்கப்படும் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யவுள்ள கிராமங்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட காவல் போலீஸ் எஸ்பி சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேஷ், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.