டெல்லி, மும்பை உட்பட பெருநகரங்களில் காற்றுமாசு அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாசுவை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், விதி மீறுவோருக்கு அபராதம் விதிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு திருத்த சட்டம் 2022, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக கார்பன் வெளியிட்டால், அதனை உற்பத்தி செய்த நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டம் கடந்த ஜனவரியில் அமலுக்கு வந்தது. கிலோ மீட்டருக்கு 4.7 கிராமுக்குள் கார்பன் வெளியிட்டால் காருக்கு ரூ.25,000 அபராதமும், 4.7 கிராமுக்கு மேல் இருந்தால் ரூ.50,000ம் அபராதமும் விதிக்கப்படும். இந்த விதியின்படி, பல்வேறு நிறுவனங்கள் ரூ.370 கோடி வரை அபராதம் செலுத்தியிருக்கின்றன.
உற்பத்தி செய்யப்பட்ட காரின் எடை, விற்பனையான கார்களின் எண்ணிக்கை, கார்பன் வெளியிடும் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த அபராதத்தொகை கணக்கிடப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் அபராதம் நாள் ஒன்றுக்கு ரூ.10,000 தொடங்கி விதிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த அபராதத்தில் இருந்து தப்பிக்கவும், மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்க உதவும் வகையிலும் கார் நிறுவனங்கள் அவசர கதியில் புதிய நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கார் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.