சென்னை: ஏர் இந்தியா விமான வருகை தாமதமானதால், நேற்று இலங்கை, அந்தமான் செல்லும் ஏர்இந்தியா விமானங்களின் புறப்பாடு 3 மணிநேரம் தாமதமானது. இதன் காரணமாக பயணிகள் அவதிப்பட்டனர். டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு ஏர்இந்தியா விமானம் வந்து சேரவேண்டும். இந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக, நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. முன்னதாக, இந்த விமானம் டெல்லியில் இருந்து சென்னை வந்தபின், நள்ளிரவு 12.25 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்புக்கு சர்வதேச விமானமாக புறப்பட்டு செல்லும்.
பின்னர் அங்கிருந்து அதிகாலை 4.25 மணியளவில் சென்னை திரும்பிவரும். இதை தொடர்ந்து, அதே விமானம் அதிகாலை 5.05 மணியளவில் உள்நாட்டு விமானமாக மாறி, சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், டெல்லியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் சென்னை வந்து சேரவேண்டிய ஏர்இந்தியா விமானம், 3 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் அந்த விமானம் 4 மணிநேரம் தாமதமாக, அதிகாலை 4.20 மணியளவில் இலங்கைக்கு புறப்பட்டு சென்றது.
பின்னர் அங்கிருந்து நேற்று காலை 7.20 மணியளவில் சென்னை திரும்பியது. இதனால் காலை 5.05 மணியளவில் சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லவேண்டிய ஏர்இந்தியா விமானம், மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 8.45 மணியளவில் அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. சென்னை விமான நிலையத்தில் இதேபோல் சங்கிலி தொடராக நேற்று ஏர் இந்தியா விமானங்களின் அடுத்தடுத்து வருகை, புறப்பாடு தாமதத்தால் டெல்லி, இலங்கை மற்றும் அந்தமான் செல்லும் பயணிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாததால், அவர்கள் சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.