மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தின் ட்ரீம்லைனர் 787-8 விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் நோக்கி கடந்த 12ம் தேதி புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர் பலியாகினர். ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களையும் புறப்படும் முன்பாக பரிசோதனை செய்ய ஒன்றிய விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டது.
இந்நிலையில், புறப்படும் முன்பாக விமானங்கள் பரிசோதிக்கப்பட்ட போது கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக நேற்று ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 6 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு-லண்டன், டெல்லி-வியன்னா, டெல்லி-பாரிஸ், மும்பை-சான்பிரான்சிஸ்கோ, லண்டன்-அமிர்தசரஸ், டெல்லி-துபாய் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுதவிர, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்ல இருந்த விமானத்தையும் ஏர் இந்தியா ரத்து செய்தது. போதுமான விமானம் இல்லாததால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவன செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் கொல்கத்தா விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கப்பட்டனர். இதே போல, டெல்லியிலிருந்து பாரிஸ் செல்லும் விமானத்திலும் புறப்படும் முன்பாக கோளாறு கண்டறியப்பட்டதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து தருவதாக ஏர் இந்தியா தெரிவித்தது. ஓட்டல் உள்ளிட்ட தங்குமிடங்களை வழங்குவதாகவும் தேவைப்பட்டால் டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திருப்பி தருவதாகவும் உறுதி அளித்துள்ளது. ரத்தான 6 விமானங்களில் 5 விமானங்கள் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் நிறுவனம் 787-8 ட்ரீம்லைனர் ரகத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.