டெல்லி : ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா விமான சேவை நிறுவனம் நேற்று முறைப்படி இணைந்த நிலையில், இன்று முதல் ஏர் இந்தியா பெயரிலேயே அனைத்து விமானங்களும் இயக்கத் தொடங்கி உள்ளன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே டாட்டாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் முறைப்படி இணைந்துள்ளது. இதையடுத்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்கள், இன்று முதல், ஏர் இந்தியா விமானமாக வானில் பறக்கத் தொடங்கியுள்ளன.
விஸ்தாராவின் கடைசி விமானம் நேற்று நள்ளிரவில் டெல்லியில் இருந்து மும்பைக்கு இயற்றப்பட்டது. ஒன்றிணைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் முதல் விமானம் டோஹாவில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்டது. ஒன்றிணைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களுக்கு எண் 2ல் தொடங்கும் 4 இலக்க புதிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன. விஸ்தாரா விமானத்தின் நிறம் மற்றும் லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை ஏர் இந்தியா இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதனிடையே ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அடங்கிய டாடா விமான போக்குவரத்து முன்னணி நிறுவனமாக மாறியது. இண்டிகோ விமான நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டாடா தானே விமான நிறுவனம் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.