ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை வரும் நாட்களுக்கு முன்பு காற்று மாசுபாடு குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழும். தீபாவளி என்றாலே பட்டாசுகள், மத்தாப்புகள் என்பதுதானே மகிழ்ச்சியும் பாரம்பரியமும் என்கின்றனர் ஒரு சிலர். மறுபுறம் உலகமே காற்று மாசுபாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நேரத்தில் பட்டாசு வெடித்து மேலும் காற்றை மாசுபடுத்த வேண்டுமா? என கேட்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இது குறித்த சர்ச்சைகள் வருடா வருடம் கிளம்புவது வாடிக்கையாகி வருகிறது.
இந்தியாவில் வசிக்கும் 130 கோடி மக்கள், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவை விட அதிகமாக காற்று மாசு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். இந்தியாவின் தேசிய காற்று தர அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட மாசு அதிகமாக உள்ள பகுதிகளில், நாட்டின் 67.4% மக்கள் வசிக்கின்றனர். இந்த நுண்ணிய காற்று மாசு, இந்தியர்களின் வாழ்நாளை சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைக்கின்றன. உலகிலேயே அதிக மாசடைந்த நகரமாக புதுடில்லி உள்ளது. இந்நிலை நீடித்தால், அங்கு வசிக்கும் 1.80 கோடி மக்கள் தங்கள் வாழ்நாளில் 11.9 ஆண்டுகளை இழக்க நேரிடும் என புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன. தற்போது மாசடைந்த நகரங்களின் காற்றின் தரக்குறியீடு மதிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக காற்றின் தரம் குறைந்து, அதிகம் மாசடைந்து வருகிறது. பண்டிகைகள் வருவதால் பட்டாசு வெடித்தல், மத்தாப்புகள் கொளுத்துதல் போன்றவைகளால் காற்று மாசு அதிகரிக்க இன்னும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே சென்னையில் அதிக காற்று மாசு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் தற்போது இருப்பதை போலவே தொடர்ந்தால், 2030ம் ஆண்டு பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு என்பது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் துகள்கள் அல்லது தூசி, புகை போன்றவை காற்றில் அதிக அளவில் கலந்து காணப்படுவதையே குறிக்கும். காற்று மாசுபாட்டால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். குழந்தைகளை பொறுத்தவரையில் உடனடி சுவாச பிரச்னைகள் முதல் நீண்ட கால வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் பிரச்னைகள் வரை ஏற்படுத்தும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதைகளில் துகள்கள் ஆழமாக ஊடுருவி சேதப்படுத்தும். நச்சுக் காற்று குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் பாதிக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். இதனால் நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றை உண்டாக்கும். இதய நோய், நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை கூட அதிகரிக்கலாம். பிறப்பதற்கு முன்பே குழந்தைகள் நச்சுக் காற்றால் பாதிக்கப்படலாம் என பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதனை தவிர்க்க பொதுமக்கள் மாசு அளவுகள் அதிகமாக இருக்கும்போது நீண்ட நேரம் வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம். பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மேலும் எரிபொருள் பயன்பாட்டை கூடிய மட்டும் குறைக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து மூலம் வெளியாகும் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதென்ன பசுமை பட்டாசு… பாரம்பரிய வகை பட்டாசுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விகள் பலருக்கு எழுவது சகஜம்தானே!
‘பசுமை பட்டாசு’ என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) கண்டுபிடிப்பு. இது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் வரும் அரசு நிறுவனம். பசுமை பட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளை போலவே இருக்கும். வெடிக்கும்போது சப்தம் எழுப்பும். ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும். சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50% குறைவான நச்சு வாயுவை வெளியிடும். பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.
பசுமை பட்டாசுகளை வெடிக்கும்போது, கந்தகம் மற்றும் நைட்ரஜன் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு சிறப்பு வகை வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பசுமை பட்டாசில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பசுமை பட்டாசுகளின் விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதாலும், அதிக அளவிலான சத்தம் மற்றும் வண்ணங்களும் அதில் தெரிவதில்லை என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள். சுற்றுச்சூழலை காக்க நாம் சில முன்னெச்சரிக்கைகளை செய்துதானே ஆகவேண்டும். பாதுகாப்பான முறையில் பசுமை பட்டாசுகளை வெடித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியை கொண்டாடி மகிழ்வோமே!
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்