டெல்லி: போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்பு குறித்த சோதனை முடிவுகள் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா வசமுள்ள 24 போயிங் 787 ரக விமானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் கண்டறியப்பட வில்லை என விமான போக்குரவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சுமார் 271 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து போயிங் 787 ரக விமானங்களை சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் ஏர் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகள் தரப்பிலான உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தற்போது உள்ள பாதுகாப்பு தர நிலைகளுக்கு ஏற்ப விமானங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொறியியல், செயல்பாடுகள் மற்றும் தரையிறங்குதல் பிரிவுகளில் உள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திடம் மொத்தமாக 33 போயிங் 787 ரக விமானங்கள் இருக்கும் நிலையில், 24 விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் முடிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான ஜூன் 12ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை 23 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 66 விமானங்கள் போயிங் 787 விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் ரத்து செய்யப்படுவது மற்றும் தாமதமாவதை பயணிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும், பயணிகள் சேவையில் கவனம் செலுத்தவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.