பூந்தமல்லி: பூந்தமல்லி பணிமனையில், குளிரூட்டப்பட்ட பணியாளர் ஓய்வறை நேற்று திறந்து வைக்கப்பட்டது. டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பூந்தமல்லி பணிமனையில் பூந்தமல்லி மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் ஓய்வு எடுக்கும் வகையில், புதிதாக ரூ3 லட்சம் மதிப்பில் குளிரூட்டப்பட்ட பணியாளர் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் திறப்பு விழா நிகழ்ச்சி மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பூந்தமல்லி நகர திமுக செயலாளர் திருமலை, நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப பொது மேலாளர் சௌந்தர பாண்டியன், மண்டல மேலாளர்கள் அலிமாஸ், சுரேஷ், வரதராஜன், கிளை மேலாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குளிரூட்டப்பட்ட பணியாளர்கள் ஓய்வு அறையை திறந்து வைத்தார். பின்னர் அனைவருக்கும் அவர் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.