* ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
* கொரோனாவை காரணம் காட்டக்கூடாது என கண்டிப்பு
மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது துவங்கி, எப்போது முடியும்? 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என ஒன்றிய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட் கிளை, எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பாஸ்கர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் மருத்துவர் – நோயாளிகளின் விகிதம் அதிக வேறுபாட்டில் இருப்பதால் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதை சரி செய்யும் வகையில், மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதால், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், வாழ்க்கை தரமும் உயரும். இதோடு தென்மாவட்டத்தினருக்கு குறைந்த செலவில் உயர்வான மருத்துவ சேவை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு 2015ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. 2018ல் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது.
இதன்பிறகு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னும் கட்டுமானப்பணிகள் துவங்கவில்லை. அடிக்கல் நாட்டியது முதல் கிடப்பிலேயே உள்ளது. இதனால், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி சில வழக்குகள் தாக்கலாகி, அதில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், கட்டுமானப் பணிகள் மட்டும் துவங்கியபாடில்லை. எனவே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில், ‘‘மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிந்து விட்டன. விரைவில் பணிகள் துவங்கி 2026க்குள் நிறைவடையும். கொரோனா காலம் இடையில் வந்ததால் தாமதம் ஏற்பட்டுவிட்டது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘இதற்காக கொரோனா காலக்கட்டத்தை காரணம் காட்ட வேண்டியதில்லை. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது? 2019ல் அடிக்கல் நாட்டிய நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கட்டுமான பணிகளை எப்போது துவங்கி, எப்போது முடிப்பீர்கள்? கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை செப். 24க்கு தள்ளி வைத்தனர்.