சென்னை: அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட காலம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் 140வது வார்டில் 1.54 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சிதான் தமிழகத்தின் இருண்ட காலம். பொய்யான பொருந்தாத காரணங்களை சொல்லி மதுரவாயல் துறைமுகம் பாலத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த பாலம் அமைந்திருந்தால் கலைஞருக்கு பேர் போய் சேர்ந்துவிடும் என்பதால் கலைஞருக்கு அந்த பெயர் போய் சேரக்கூடாது என்று அந்த பாலத்தை தடுத்து நிறுத்தினார். எடப்பாடி பழனிசாமி அந்த பாலத்தை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு முன்னேறியது என்று எப்படி சொல்கிறார் எடப்பாடி. 2017ம் ஆண்டு தான் உதய் மின் திட்டத்தில் இணைந்தார்கள். அதனால் தான் மின்கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளது. 2017ம் ஆண்டு எடப்பாடி நீட் தேர்வுக்கு ஒப்புதல் கொடுத்தார். அதனால் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். முதல்வரின் காலை உணவு திட்டத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பாக கனடா, இலங்கை போன்ற நாடுகள் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துகிறது. அரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்கள் முதல்வரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நகல் எடுத்து அதை செயல்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.