சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதி ராமேஸ்வரம் மலைச்சாமி பலியாகி சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 23.7.2024 அன்று இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 2 விசைப் படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினர் இதுபோன்ற அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் 6ம் தேதி (செவ்வாய்) காலை 10.30 மணியளவில், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையிலும் நடைபெறும்.