மதுரை: ‘ஊரை தாண்டினால் அதிமுக தலைவர்களை யாருக்கும் தெரியாது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தப் பிறகே லஞ்சம், ஊழல் அதிகரித்தது’ என்று அண்ணாமலை பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, முனிச்சாலையில் நகர் பாஜ சார்பில் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு, பாரதிய ஜனதா மரியாதை செலுத்தும் வகையில் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு சார்பாக பங்கேற்றோம். எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரியை தேர்வு செய்து அவர்களுக்கு மதிப்பளிப்பார்கள் என்பதற்கு அந்த நிகழ்ச்சியே சாட்சி. அதில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இதே மரியாதையை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் செய்தோம்.
அந்த விழாவில், எம்ஜிஆருக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டபோது, பிரதமர் மோடி கலந்து கொண்டார். எம்ஜிஆர் நாடு முழுவதும் தெரிய வேண்டிய தலைவர். அவரின் புகழை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காகத்தான், பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்டார். ஆனால், 2017ல் வெளியிட்ட நாணயத்தை, 2019ல் தான் அதிமுகவினர் வெளியிட்டார்கள். மோடியின் பக்கம் மக்கள் சென்று விடுவார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் 2 ஆண்டுகள் கழித்து நாணயத்தை வெளியிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, உதயகுமாரை தங்களது ஊர் தாண்டினால் யாருக்கும் தெரியாது. அதிமுகவில் அற்புதமான தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பின்னால் வந்த தலைவர்களை மக்கள் வேறுபடுத்தி பார்க்கின்றனர். அவர்களிடம் இருந்த நேர்மை, பின்னால் வந்தவர்களிடம் இல்லை. மக்கள் இவர்கள் மீது கடும் எதிர்ப்பில் உள்ளனர். இவ்வாறு பேசினார்.