* கொக்கைன் சப்ளை செய்த முக்கிய குற்றவாளியும் சிக்கினார்
* விசாரணை வளையத்தில் அதிமுக விஐபி மகன்கள்
சென்னை: அதிமுக ஐடி விங் பிரமுகர், நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி கொக்கைன் சப்ளை செய்த முக்கிய புரோக்கரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 9 வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் அதிமுக விஐபி மகன்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு கும்பலும், ஏடிஎஸ்பியின் மகனும் கடந்த மே 22ம் தேதி மோதிக்கொண்டது குறித்து இரு தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு தரப்பினரான அதிமுக ஐடி விங் பிரமுகர் பிரசாத், விளையாட்டு அணி பிரமுகர் அஜய்வாண்டையார், இசிஆர் ராஜா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான பிரசாத், அஜய்வாண்டையார் குறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் வாண்டையார் ஆகியோர் போதைப் பொருள் விற்பனையும் செய்து வந்தது தெரியவந்தது.
இவர்களில் பிரசாத், தீங்கிரை என்ற பெயரில் நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து படம் தயாரித்துள்ளர். இந்த படத்திற்கு ரூ.30 லட்சம் ஸ்ரீகாந்திற்கு சம்பளமாக பிரசாத் பேசினார். அதில் ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டியது இருந்தது. அதற்கு பதில் பார்ட்டிக்கு அழைத்து கொக்கைன் விற்பனை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் கொக்கைன் என்ற போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி அவருக்கு ரூ.30 லட்சத்துக்கான கொக்கைனை விற்பனை செய்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களான கிருஷ்ணா, மச்சான்ஸ் நடிகை, ஒல்லிபச்சான் நடிகை உள்பட பல சினிமா பிரபலங்களை அழைத்து வந்து பிரசாத்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த விருந்துக்கு பிரசாத், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மகன்களையும் அழைத்து வந்துள்ளார். அங்குதான் கொக்கைன் பரிமாறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் சென்னை மட்டுமல்லாது, கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், ரிசார்ட்களில் அறைகள் எடுத்து போதைப் பொருளை பயன்படுத்தி வந்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நடிகர் ஸ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனையிட்டபோது போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாக்கெட்டுகளில் கொக்கைன் இருந்ததை போலீசார் கைப்பற்றினர். அவரிடம் மருத்துவ பரிசோதனையும் நடந்தது.
இதற்கிடையில், நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பினர். சம்மனை ஏற்று, அவர் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உபயோகப்படுத்தவில்லை என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவரிடம் ேபாலீசார் நேற்று முன்தினம் பகல் மற்றும் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். இதில், பிரசாத்துக்கும் கிருஷ்ணாவுக்கும் உள்ள வங்கி தொடர்பு, பண பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது தெரியவந்தது. மேலும் பிரசாத்துக்கு கொக்கைன் சப்ளை செய்யும் பிரதீப்குமாரை போல பல போதைப் பொருள் வியாபாரிகளை தெரியும். அதில் ஒருவரான ஜெஸ்வீர் என்ற கெவின் (34) என்பவரும் சப்ளை செய்து வந்தது தெரிந்தது. இதனால் அவரையும் போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தினர். அதோடு நடிகர் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர் அஸ்வின் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கெவினின் வங்கிக் கணக்கிற்கு பல லட்சங்களை கிருஷ்ணா அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் வாங்கியதற்கான பணத்தை கிருஷ்ணா, கெவினுக்கு கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து, வளசரவாக்கத்தில் உள்ள கெவின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கொக்கைன் அரை கிராம், மெத்தாம்பெட்டமைன் 10.30 கிராம், எம்டிஎம்ஏ 2.75 கிராம், ஒஜி கஞ்சா 2.40 கிராம், கஞ்சா 30 கிராம், ஒசி பேப்பர் 40 கிராம், ஜிப்லாக் கவர் 40 கிராம், எடைபோடும் இயந்திரம் 2, ஒரு லேப் டாப், ஒரு செல்போன், ரூ.45,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ஸ்ரீகாந்த், பிரசாத்தை அறிமுகம் செய்த பிறகு பிரசாத்துடன் கிருஷ்ணா நேரடியாக பழக தொடங்கி உள்ளார். பிரசாத்திடம் கொக்கைன் வாங்கியவர், பின்னர் நேரடியாக போதைப் பொருள் வியாபாரியிடமே வாங்க தொடங்கிவிட்டார்.
மேலும் பிரசாத், கிருஷ்ணா, கெவின் ஆகியோர் இணைந்த ஒரு வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ் அப் குரூப்பில் போதைப் பொருள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பேசி வந்துள்ளனர். இதனால், வாட்ஸ் அப் குழுவில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். மேலும், நடிகர் கிருஷ்ணாவின் பெசன்ட் நகர் வீட்டில் நுங்கம்பாக்கம் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை பிற்பகல் வரை நீடித்தது. பின்னர் நேற்று இரவு கிருஷ்ணா, கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் போதைப் பொருள் வழக்கில் 2 பெரிய நடிகர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. இதுவரை பெயர் தெரியாத நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது பெரிய நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்கள் மற்றும் சினிமா நடிகர்கள், நடிகைகள் வட்டாரத்தில் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த விவாகரத்தில் அதிமுக விஐபி மகன்கள் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
* ரகசிய கோடு வேர்ட்
பிரசாத், கெவின், கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கொண்ட வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் பல அதிமுக விஐபிக்களின் மகன்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு வேண்டிய போதைப் பொருளை ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளனர். மேலும் இதற்காக ரகசிய குறியீடு (கோடு வேர்ட்) மூலம் பேசி வந்துள்ளனர். அதை போலீசார், கிருஷ்ணா மற்றும் கெவினிடம் காட்டி விசாரணை நடத்தி போதைப் பொருள் விநியோகத்தை உறுதி செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால் அவர்களை பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.