சென்னை: திமுக ஐடி விங்க் செயலாளரும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் நலன் மீது துளியும் அக்கறையில்லாத தமிழ் விரோதிகள்தான், மாநிலத்தின் சாதனைகளை பாராட்ட மனமின்றியும், அவற்றைக் கண்டு மனம் வெதும்பியும், ஏதாவது களங்கம் கற்பிக்க முடியுமா என்று சிந்தித்து, அவதூறுகளைப் பரப்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கிறார். அவர் அரசியல் கூட்டாளியான பாஜவுடன் கைகோர்த்துக்கொண்டு, பாஜவின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.
கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜ அரசின் செயல்பாடுகளையும், தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜவின் தமிழர் விரோதப் போக்கிற்காகவும்தான் எடப்பாடி பழனிசாமி கோபமடைய வேண்டும். முருகன் பெயரில் பாஜ நடத்திய அரசியல் கூட்டத்தில் பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியைப் பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்த தன் கட்சி நிர்வாகிகள் மீது அவருக்கு கோபம் வரவில்லை. இன்னமும் அவரது கட்சி அண்ணாவின் பெயரில்தான் இயங்குகிறதா இல்லையா? சமீபத்தில், திமுகவின் ஐ.டி.விங், பாஜவின் துரோக முகத்தையும், நமது தமிழர்களின் பெருமைமிக்க பண்பாட்டுக் கருவூலமான கீழடி விவகாரத்திலும், மேலும் பலவற்றிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தமிழ் விரோத நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி, தக்க பதிலடி கொடுத்தது.
திமுக ஐடி விங்கின் பாய்ச்சலையும், அதிமுக ஐ.டி.விங்கின் படுதோல்வியையும் எதிர்க்கட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அதிமுக ஐ.டி.விங்கின் அவதூறு பரப்பும் வேலையையும் அவரே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.