மதுரை: அதிமுக ஆட்சியில் சாலை விவகாரத்தில் அப்போதைய துணை மேயர் அளித்த தகவலும், இப்போது மாநகராட்சி அளித்த தகவலும் முரண்பாடாக உள்ளதால் பணியில் முறைகேடு நடந்து உள்ளதா என விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கான்ட்ராக்டர் பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாநகராட்சி 20வது வார்டு பொன்நகர் பகுதியில் கடந்த 2015-16ல் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி எனக்கு ஒதுக்கப்பட்டது.
பணி ஆணைக்காக காத்திருந்தபோது, மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் உடனடியாக பணிகளை மேற்கொள்ளுமாறு மண்டலம் 1 உதவி ஆணையரும், அப்போதைய துணைமேயர் திரவியமும் (அதிமுக) கூறினர். இதன்படி நான் பணிகளை மேற்கொண்டேன். ஆனால், பணிகள் முடிந்ததும், மேற்கொண்ட பணிக்குரிய பணம் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, பணத்தை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மாநகராட்சி தரப்பில் மனுதாரர் ஏற்கனவே 93வது வார்டில் முறையாக பணிகள் மேற்கொள்ளவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளால் பணி ஆணை வழங்கப்படவில்லை. அதே நேரம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளதை அப்போதைய துணைமேயரின் கடிதம் தெளிவாக காட்டுகிறது. இந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நடவடிக்கை முரண்பாடாக உள்ளது. எப்போது தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதோ, அப்போது முதல் எந்தப் பணிக்கும், பணி ஆணை வழங்கக் கூடாது. தேர்தலின்போது முறையாக டெண்டர் வழங்கப்பட்டதா எனத் தெரியவில்லை. எனவே, இந்த டெண்டர் விவகாரம் குறித்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி விசாரித்து 3 மாதத்தில் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.